Ads 468x60px

Wednesday, May 9, 2012

வாழவிடுவோம் பறவைகளை !

அதிகாலை மலருமுன்னே
அழகாய்ப் பறந்து வந்து
அடைக்கலம் தேடி நின்ற
அடைக்கலான் குருவி இரண்டு
அன்பாய்க் கூடிவாழ
முடிவெடுத்து இணையாக
தாய்வீடு விட்டுவிட்டு
புதுவாழ்வைத் தொடங்கிடவே
என் வீட்டு உத்திரத்தில்
கூடுகட்ட வந்ததுவே !

புதுவாழ்வின் குதூகலமும்
அறியா வாழ்வின் விடுகதையும்
அறிந்தது போல் வந்திருந்து
கொஞ்சிக் குலாவி ஓசையிட்டு
பாடிப் பறந்து திரிந்ததுவே !
காற்றடிக்கும் திசை பார்த்து
போக வர வழி கண்டு
இடமொன்றைத் தேர்ந்தெடுத்து
தனக்கென்று ஓர் வீட்டை
கட்ட துவங்கிய அழகுதனை
படுத்திருந்து பார்த்திருந்தேன்
மனிதன் ஒன்றுமில்லை மனம் பாடியது !

தங்களுக்குள் பேசிக்கொண்டு
வெளியே சுற்றித் திரிந்து
இலை, தழைகள் எடுத்து வந்து
சிற்பம் செதுக்கும் அழகென்ன !
ஒன்று முதலில் வந்துவிட்டால்
இணை வரும் நேரம் வரை
காத்திருந்துப் பார்த்துவிட்டு
பேசிச் செல்லும் மொழியென்ன ?
வீடு கட்டியாயிற்று அதில்
முட்டையிட வசதியாய்
மேல்பரப்பில் மெத்தையும்
புள்ளியிட்ட பச்சை நீல நிறத்தினிலே
மூன்று முட்டைகள் என்ன அழகு !

ஒன்று அடை காக்கையிலே
மற்றொன்று இரைதேடுவதும்
இரையெடுத்து வந்த பின்னர்
இணை இரை தேடப் போவதும்
திடீரென்று ஓர் நாளில்
கீச் , கீச் சத்தம் வர அவை
துள்ளியாடி திகைத்ததுவும் !
குருவியாய் நான் பிறக்க வேண்டும் .
ஆசை துளிர் என்னில் விட்டதுவும் !

விட்டில் பூச்சி பட்டாம் பூச்சி
தானியங்கள் நெல் அரிசியென
எங்கெங்கோ பறந்து திரிந்து
மகவுக்காய் உணவு தேடி
மகிழ்வோடு கொண்டு வந்து
ஊட்டி மகிழ்ந்த காட்சி கண்டு
அடிவயிற்றில் தாய்ப்பாசம்
தானாய்த் துடித்தெழுந்து
தானியம் அள்ளி எடுத்து
ஆதரவாய் அது பார்க்க வைத்தேனே  !

தாயில்லா நேரத்தில்
தகப்பன் காவலாளியாய்!
உலகின் அழகையெல்லாம்
பூட்டி வைத்த பெட்டகமாய்
வாழ்ந்திருந்த ஜோடிகளும்
சிறகு முளைத்த மகவுகளைப்
பறக்க வைக்க எடுத்த முயற்சி
அதுவொரு தனிக் கவிதை
அப்பாடா ... என்ன உழைப்பு !
ரசித்து ரசித்து மகிழ்ந்த மனம் !
ருசித்து ருசித்து எழுதிய பேனா !!
எத்தனை வேலை இருந்தாலும்
காத்திருக்கும் குழந்தைக்காய்
இல்லம் ஓடி வரும் அந்திமாலை
முதல் வேலையாய் இவர் வாழ்வை
பார்ப்பதே என் வேலையாக ....

இன்று பார்த்த போது
பெற்றவர் மட்டும் தனியாக
பிள்ளைகளைக் காணவில்லை ...
அவை எங்கே ? தேடிப்பார்த்தேன்
இரவிலும் வரவில்லை .
எமனாய் அரவம் வந்ததா ?
வல்லூறு கொண்டு சென்றதா ?
இரவு முழுவதும் தூக்கம் தொலைத்து
காலையில் பார்க்கையில்
புதிதாய் இரண்டு ஜோடி
புதுவாழ்க்கை ஆரம்பம்
தள்ளியிருந்து ரசிக்கின்ற
பெற்றவர்கள் பார்த்திருக்க
பார்வையாளனாய் நானும் ...

அறுபது நாள் என் வீட்டில்
மின்விசிறி சுழலவில்லை
கோபத்தில் ஆத்துக்காரர்
வாங்கிவந்த  குளிர்சாதனப் பெட்டி
வாழ்வதனைப் பறிக்கும் எமனாய் !

அழகென்றால் இதுதானோ ?
பறந்து திரியட்டும் சிட்டுக்கள்
வேடந்தாங்கலாய் நாம் மாறி
பாதுகாத்தல் நம் கடமை
வாழவிடுவோம் பறவைகளை !
இன்னும் வாசிக்க... "வாழவிடுவோம் பறவைகளை !"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி