Ads 468x60px

Saturday, August 29, 2015

நாவினிக்க பேசும் மச்சான்!

தூர தேசம் போன மச்சான்
நெனப்பு மட்டும்
எனக்கு மிச்சம்!
தூக்கமில்லா கண்ணிரண்டும்
துணைக்கு வந்தே உன்ன சுத்தும்!

நீ ஏத்தி கட்டுன லுங்கி
என் ஏக்கம் சொல்லிடும் மிஞ்சி!

ஆத்தங்கர மேடுமில்ல
அருகமர நீயுமில்ல..
அடுக்கடுக்கா சேதி முட்ட
அனுப்ப ஒரு தூதுமில்ல...

தொலைபேசி அழைப்புவர
தொண்டக்குழி கண்ணீர் முட்ட...
தொட்டெழுப்பும் மூச்சுக்காத்தும்
சொல்லிடுமா நெனப்பமுட்டும்....

நாவினிக்க பேசும் மச்சான்
நாளு கெழம வந்தாயென்ன
நாட்டமில்ல எதுலுமிங்கே
நாடிவரும் நாளச்சொல்லு
நான்கிழிப்பேன் தேதியிங்கே!
இன்னும் வாசிக்க... "நாவினிக்க பேசும் மச்சான்!"

Friday, August 28, 2015

நினைவே இனிக்கும் கனவு!


நினைவே இனிக்கும் கனவு!
 (பதினைந்து மண்டிலம்)
1
நினைவே இனிக்கும் கனவு!  மனதில்
புனையும் கனிவு! பனிபோல் - தினமும்
இனிது! நனிசீர் அனைத்தும் இனிப்பு!
வனம்போல் கனிசேர் மனத்து!
2
இனிக்கும் கனவு!  மனதில் புனையும்
கனிவு! பனிபோல் தினமும்- இனிது!
நனிசீர் அனைத்தும் இனிப்பு! வனம்போல்
கனிசேர் மனத்துநினை வே! 
3
கனவு  மனதில் புனையும் கனிவு!
பனிபோல் தினமும் இனிது!- நனிசீர்
அனைத்தும் இனிப்பு! வனம்போல் கனிசேர்
மனத்துநினை வேஇனிக் கும்!
4
மனதில் புனையும் கனிவு! பனிபோல்
தினமும் இனிது! நனிசீர்- அனைத்தும்
இனிப்பு! வனம்போல் கனிசேர் மனத்து!
நினைவே இனிக்கும் கனவு!
5.
புனையும் கனிவு! பனிபோல் தினமும்
இனிது! நனிசீர் அனைத்தும்- இனிப்பு!
வனம்போல் கனிசேர் மனத்து நினைவே
இனிக்கும் கனவுமன தில்!
6.
கனிவு பனிபோல் தினமும் இனிது!
நனிசீர் அனைத்தும் இனிப்பு!- வனம்போல்
கனிசேர் மனத்து நினைவே இனிக்கும்
கனவுமன தில்புனை  யும்!
7.
பனிபோல் தினமும் இனிது! நனிசீர்
அனைத்தும் இனிப்பு! வனம்போல் -கனிசேர்
மனத்து நினைவே இனிக்கும் கனவு
மனதில் புனையும் கனிவு!
8.
தினமும் இனிது! நனிசீர் அனைத்தும்
இனிப்பு! வனம்போல் கனிசேர் -மனத்து
நினைவே இனிக்கும் கனவு மனதில்
புனையும் கனிவுபனி போல்!
9.
இனிது நனிசீர் அனைத்தும் இனிப்பு!
வனம்போல் கனிசேர் மனத்து நினைவே
இனிக்கும் கனவு மனதில் புனையும்
கனிவுபனி போல்தின மும்!
10.
நனிசீர் அனைத்தும் இனிப்பு! வனம்போல்
கனிசேர் மனத்து நினைவே - இனிக்கும்
கனவு மனதில் புனையும் கனிவு
பனிபோல் தினமும் இனிது!
11.
அனைத்தும் இனிப்பு! வனம்போல் கனிசேர்
மனத்து  நினைவே இனிக்கும் -கனவு
மனதில் புனையும் கனிவு பனிபோல்
தினமும் இனிதுநனி சீர்!
12.
இனிப்பு வனம்போல் கனிசேர் மனத்து
நினைவே இனிக்கும் கனவு - மனதில்
புனையும் கனிவு பனிபோல் தினமும்
இனிதுநனி சீர்அனைத் தும்!
13.
வனம்போல் கனிசேர் மனத்து நினைவே
இனிக்கும் கனவு மனதில் - புனையும்
கனிவு பனிபோல் தினமும் இனிது
நனிசீர் அனைத்தும் இனிப்பு!
14.
கனிசேர் மனத்து நினைவே இனிக்கும்!
கனவு மனதில் புனையும்!- கனிவு
பனிபோல் தினமும் இனிது! நனிசீர்
அனைத்தும் இனிப்புவனம் போல்!
15.
மனத்து நினைவே இனிக்கும்! கனவு
மனதில் புனையும் கனிவு! - பனிபோல்
தினமும் இனிது நனிசீர் அனைத்தும்
இனிப்புவனம் போல்கனி சேர்!
இலக்கணக் குறிப்பு

பதினைந்து மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினைந்து சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
இந்தப் பதினைந்து மண்டில வெண்பாவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள  எங்கள் ஆசானின் பதிவில் காணலாம்!
இன்னும் வாசிக்க... "நினைவே இனிக்கும் கனவு!"

Wednesday, August 26, 2015

அங்கம் துடிக்குதடி ஆருயிரே!


தங்கத்தை  தொட்டிலிட்டுத் தாலாட்டும் நான்பாட
அங்கம் துடிக்குதடி ஆருயிரே -இங்கோடும்
பந்தய ஓட்டத்தைப்  பார்த்தாயோ  நாமோடப்
பிந்திவிட்டால் நாடும்  பிணி!

கருவில் சுமந்தவுனைக் காலம் சுமக்கும்
வருகின்ற காலம் வளமே- தருவதற்கே
ஓடுகின்ற ஓட்டமடி ஒய்யாரி வானொலியில்
பாடுகின்ற தாலாட்டே பண்!

கங்காரு போலுன்னைக் காக்க வழியறியேன்
இங்குனக்குக் காவலுக்கே என்தாயும்-  அங்கம்
சுரந்திடும் பாலும் சுமையாகிப் போச்சே
உருளும் துயரில் உயிர்!
இன்னும் வாசிக்க... "அங்கம் துடிக்குதடி ஆருயிரே!"

Monday, August 24, 2015

பதினான்கு மண்டிலம்!


1.
தென்றலருள்  இன்றுமெனை இன்பமுறும்! அன்புமொழி
என்றனுளம் என்றுமிணை! மின்னுமெழில் - என்தமிழே
கன்னலென அன்னைமொழி! என்னசுவை? என்னசுவை?
என்றனுயிர்  வென்றது வே!

2.
இன்றுமெனை இன்பமுறும்!அன்புமொழி! என்றனுளம்
என்றுமிணை மின்னுமெழில் என்தமிழே! - கன்னலென
அன்னைமொழி! என்னசுவை? என்னசுவை? என்றனுயிர் 
வென்றதுவே! தென்ற லருள்!

3.
இன்பமுறும் அன்புமொழி என்றனுளம் என்றுமிணை!
மின்னுமெழில் என்தமிழே! கன்னலென - அன்னைமொழி!
என்னசுவை? என்னசுவை? என்றனுயிர்  வென்றதுவே!
தென்றலருள்! இன்று மெனை!

4.
அன்புமொழி என்றனுளம் என்றுமிணை! மின்னுமெழில்
என்தமிழே! கன்னலென அன்னைமொழி! - என்னசுவை?
என்னசுவை? என்றனுயிர்  வென்றதுவே!  தென்றலருள்!
இன்றுமெனை! இன்ப முறும்!

5.
என்றனுளம் என்றுமிணை மின்னுமெழில் என்தமிழே!
கன்னலென அன்னைமொழி! என்னசுவை? - என்னசுவை?
என்றனுயிர்  வென்றதுவே!  தென்றலருள்! இன்றுமெனை
இன்பமுறும்! அன்பு மொழி!

6.
என்றுமிணை மின்னுமெழில் என்தமிழே! கன்னலென
அன்னைமொழி! என்னசுவை? என்னசுவை? - என்றனுயிர் 
வென்றதுவே!  தென்றலருள் இன்றுமெனை இன்பமுறும்!
அன்புமொழி! என்ற னுளம்!

7.
மின்னுமெழில் என்தமிழே! கன்னலென அன்னைமொழி!
என்னசுவை? என்னசுவை? என்றனுயிர்  - வென்றதுவே! 
தென்றலருள் இன்றுமெனை இன்பமுறும்! அன்புமொழி!
என்றனுளம்! என்று மிணை!

8.
என்தமிழே! கன்னலென அன்னைமொழி! என்னசுவை?
என்னசுவை? என்றனுயிர்  வென்றதுவே!  - தென்றலருள்
இன்றுமெனை இன்பமுறும்! அன்புமொழி என்றனுளம்!
என்றுமிணை! மின்னு மெழில்!

9.
கன்னலென அன்னைமொழி! என்னசுவை? என்னசுவை?
என்றனுயிர்  வென்றதுவே!  தென்றலருள் - இன்றுமெனை
இன்பமுறும்! அன்புமொழி என்றனுளம்! என்றுமிணை!
மின்னுமெழில்! என்தமி ழே!

10.
அன்னைமொழி! என்னசுவை? என்னசுவை? என்றனுயிர் 
வென்றதுவே!  தென்றலருள் இன்றுமெனை - இன்பமுறும்!
அன்புமொழி என்றனுளம்! என்றுமிணை மின்னுமெழில்
என்தமிழே கன்ன லென!

11.
என்னசுவை? என்னசுவை? என்றனுயிர் வென்றதுவே! 
தென்றலருள் இன்றுமெனை இன்பமுறும்! - அன்புமொழி
என்றனுளம்! என்றுமிணை மின்னுமெழில் என்தமிழே!
கன்னலென அன்னை மொழி!

12
என்னசுவை? என்றனுயிர் வென்றதுவே!  தென்றலருள்
இன்றுமெனை இன்பமுறும்! அன்புமொழி - என்றனுளம்!
என்றுமிணை மின்னுமெழில் என்தமிழே! கன்னலென
அன்னைமொழி! என்ன சுவை?

13.
என்றனுயிர் வென்றதுவே!  தென்றலருள் இன்றுமெனை
இன்பமுறும்! அன்புமொழி என்றனுளம்! - என்றுமிணை
மின்னுமெழில் என்தமிழே! கன்னலென அன்னைமொழி!
என்னசுவை? என்ன சுவை?

14.
வென்றதுவே!  தென்றலருள் இன்றுமெனை! இன்பமுறும்
அன்புமொழி என்றனுளம்! என்றுமிணை மின்னுமெழில்
என்தமிழே! கன்னலென அன்னைமொழி என்னசுவை?
என்னசுவை?  என்ற னுயிர்!



இலக்கணக் குறிப்பு

பதினான்கு மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
 
இன்னும் வாசிக்க... "பதினான்கு மண்டிலம்!"

Thursday, August 20, 2015

இலக்கை நோக்கி!


இலக்கணமில்லா மொழியில்லை
இலக்கில்லா வாழ்வில்லை
இலக்கது அறிந்ததாய் நினைத்து
அறியாததாய் ஓர்  ஓட்டம்!

பெற்றவர் பிள்ளைக்கு
வைக்கும் இலக்கு
பொது விதியில்லை!
பிள்ளைகள் பெற்றோரின்
இலக்கை எட்டிப்பிடிப்பின்
அதுவே இலக்கணப் பிழையின்றி
வாழும் பெருவாழ்வு!

புள்ளிகள் கோலங்கள் ஆகவேண்டும்
பொது விதி -ஆனால்
புள்ளிகள் புள்ளிகளாகவே கரையும்
பலர் வாழ்வில் அதுவும் இலக்கின்றியே!

உயர்வென்பது வாழ்வில்
கனவின் இலக்கு!
கனவு நனவாவதோ அவரவர்
கையின் உழைப்பு!

உழைப்பை மட்டும் அணிந்தவர்
இலக்கை அடைந்தாரா?
முன்னும் பின்னும் முரண்பாடுகள்
இலக்கடையப் பணச்சீர்கேடுகள்
பணமிருந்தால் இலக்குண்டா!
அதுவும் கேள்வியாய்!

நிம்மதி மட்டும் இலக்கென்றால்
உண்ண உணவு, உடுக்க உடை
இருக்க நிழல் போதுமென்ற
மனம் வேண்டும்!

மற்ற இலக்கெல்லாம் தானாய்
இலக்கியமாய்த் தேடி வரும்!
அதுவே இலக்கணம்
வாழ்வில் வளர
இலக்கு மட்டும் போதுமா?

அன்பு வேண்டும்
அறிவு வேண்டும்
பண்பு வேண்டும்
உழைப்பு வேண்டும்
அப்துல் கலாம் சொன்னதைப்போல்
வெற்றிக் கனவு வேண்டும்!
இன்னும் வாசிக்க... "இலக்கை நோக்கி!"

Thursday, August 13, 2015

செந்தேன்.... முத்து!

                                                     இளமதிக்கு வெண்பாக் கொத்து!

எங்கள் வணக்கத்திற்குரிய ஆசான் திரு.கி.பாரதிதாசன் ஐயா இலக்கண விளக்கத்துடன் எழுதி வெளியிட்டிருந்த வெண்பாக் கொத்து எனும் வகையை என் தோழி இளமதியும் ஆசிரியரைப் பின்பற்றி எழுதியிருந்தார். ஐயாவின் மாணவர்கள் ஆகிய நாங்கள்  ஆர்வமுடன் கற்க அவர் தரும் ஊக்கமும் உற்சாகமுமே காரணம் ஐயாவிற்கு எனது வணக்கத்தையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொண்டு தோழி இளமதிக்கு வெண்பாக் கொத்தை எனது அன்புப்பரிசாகத் தருகிறேன்.


குறள் வெண்பா

செந்தேன் கவிகண்டு தென்றல் மகிழ்ந்தாடி
முந்தும் சுவைத்தமிழ் முத்து!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

செந்தேன் மலர்ச்செண்டு தேவி உனக்கெடுத்து
வந்திடவோ? வாழ்த்தும் மனத்தோடே - சந்தமுடன்

முந்திவரும் முத்தமிழ் முத்து!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா
செந்தேன்  இனிக்கவில்லை தேவியுன்  பாட்டைப்போல்
சிந்தை நிறைந்திடும் தீஞ்சுவையை நீதருக
முந்தியில் மூடிவைத்த  முத்து!


நேரிசை வெண்பா
செந்தேன் மலரும் தினமேங்கும் நீபாட 
வந்துந்தம் கூந்தலில் வாழ்ந்திடும்- இந்தநிலாச்
சிந்தும் மொழியழகைச் சேர்த்தணைத்துச் சீராட்டும்
முந்தைத் தொடர்பிருக்கும் முத்து!


இன்னிசை வெண்பா
செந்தேன் பொழிந்து திசையெங்கும் பாய்ந்திடும் 
உந்தம் கவிமழையில் உள்ளம் உருகிடும்
மந்தநிலை போக்கி வளமதும் நல்கிடும்
முந்தும் மகிழ்வெனும் முத்து!


பஃறொடை வெண்பா

செந்தேன் மழையாகிச் சீராட்டும் சொற்களையே
பைந்தமிழ்ப் பாத்தொடுத்துப்  பாடிடவோ - சந்தங்கள்
கள்ளாகிப் போதைதந்து கற்பனையில் ஆட்டமிடும்
உள்ளாடும் சேதிகளை ஓதிடவே - தள்ளாடும்
வண்டாகி மாலையினை வட்டமிடும் வாஞ்சையுடன்

உண்டாகும் ஆசைதனை ஓவியமாய் - ஒண்டமிழில்
நானெழுதி ஓடையதில் நாட்டியமே ஆடவிட்டு
வானோடும் மேகமென வையத்தில் - ஊனெடுத்த

நற்பயனை நானடைய நானும் கவிபாடிக்
கற்றோரின்  முன்வைத்தே காத்திருக்கச் - சொற்போரும்
எந்தம் மனத்திலும்  ஏனோ? இளமதியே

முந்தி முகங்காட்டும் முத்து!
 

இலக்கண விளக்கம்
வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.
அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

   
இன்னும் வாசிக்க... " செந்தேன்.... முத்து!"

Tuesday, August 11, 2015

வண்ணம் கொண்டே வந்திடும் தூதே!


சின்னப் பூவாய்ச் சிரிக்கும் மொட்டாய்
மின்னல் கண்டே மிரண்ட பெண்ணும்
கன்னம் மிளிரக் கதைக்கக் கேட்டு
முன்னம் பார்த்த முகமோ என்றே
பின்னே மறைந்து பிரியம் கொண்டால்
 அன்றே அவனில் ஆழ்ந்த நினைவை
அழகாய்த் தொடுத்து அகத்தில் சூடிப்
பழகும் நிலவாய்ப் பவனி வந்தாள்
இனிய நிலவும் இதயம் நுழைந்து
கனவில் வருவேன் கவிதை கேட்பேன்
என்றே சொல்லி இமையைத் திறக்கும்.
உன்னை எழுப்பி உணர வைக்கும்
மலரின் மணமாய் மடலில் எழுத்தும்
மலர்ந்தே என்றன் மனதை இழுக்கும்
 காலைத் தென்றல் களிப்புடன் வருமோ?
சோலைப் பூவைச் சூடித் தருமோ?
ஆலைக் கரும்பாய் ஆனதென் உளமும்
ஓலை கண்டால் உயிர்க்கும் அதுவும்

கண்ணில் தெரியும் காதல் உருவாய்ப்
பெண்மை தன்னில் பிரியம் வளர்த்தாய்
எண்ணம் சுமந்தே என்னை நோக்கி
வண்ணம் கொண்டே வந்திடும் தூதே!


இன்னும் வாசிக்க... "வண்ணம் கொண்டே வந்திடும் தூதே!"

Tuesday, August 4, 2015

காலை நேரக் கவின்!


கிள்ளைச் சிறகடித்துக் கீழ்வானம் நோக்கியே
அள்ளிப் பருகும் அழகு.

மெல்ல எழும்பிவரும் மின்னும் கதிரொளி
சொல்லில் அடங்கா சுகம்.

கீற்றசைய ஊஞ்சலிடும் கிள்ளையுமே காட்சிதரும்
ஊற்றருவி ஓடும் உளத்து.


கூட்டின் வெளிக்கிளம்பிக் கூவும் பறவையினம்
பாட்டின் அமுதைப் பருகு.

பனிப்புல் வருடிடப் பாதம் சிலிர்க்கும்
நுனியில் மகுட நுரை.

மொட்டிதழ் வான்நோக்கும் மோகன நாட்டியம்
தொட்டணைத்து ஆடும் சுகம்.

சூரியனைக் கட்டத் துணிந்தோடும் மேகங்கள்
காரிருள் போர்த்தும் கவின்.

சில்லெனத் தென்றலாய்த் தீண்டிடும் காலையில்
புல்லிலும் பூக்கும் பொலிவு.

வண்டு வளைந்தோடி வாச மலர்மேவக்
கண்டு மனந்தாவும் காண்.

கீழ்வான் கதிர்நோக்கிக் கீற்றும் அசைந்தாட
ஆழ்ந்த உறக்கம் அகற்று.



இன்னும் வாசிக்க... "காலை நேரக் கவின்!"

Sunday, August 2, 2015

மும்மண்டில வெண்பா!

 
இன்முகம் பூக்கும்..பூ! வட்டநிலா வந்துவிடும்!
கண்டவுடன் கூத்தாடிக் கட்டவிழும் - கொண்டாடும்
சூத்திரங்கள் கற்றறிந்து  தொட்டழைக்கும் காரிகையைக்
காத்திருந்து பொற்புடன் கட்டு.

பூக்கும்..பூ வட்டநிலா வந்துவிடும்! கண்டவுடன்
கூத்தாடிக் கட்டவிழும் கொண்டாடும் -சூத்திரங்கள்
கற்றறிந்து  தொட்டழைக்கும் காரிகையைக் காத்திருந்து
பொற்புடன் கட்டின் முகம்!

வட்டநிலா வந்துவிடும்! கண்டவுடன்கூத்தாடிக்
கட்டவிழும்! கொண்டாடும்! சூத்திரங்கள் - கற்றறிந்து 
தொட்டழைக்கும் காரிகையைக் காத்திருந்து பொற்புடன்
கட்டின் முகம்!பூக்கும் பூ!
 
இலக்கண விளக்கம்
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!
 
இன்னும் வாசிக்க... "மும்மண்டில வெண்பா!"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி